ஒரு சிறிய கொப்பளத்தின் விலை
— தங்கத்தமிழன்
1. செருப்புகளை காதலித்த மனிதன்
![]() |
| கற்பனை புகைப்படங்கள் |
தர்மர்…
அவரை ஏழை என்றும் சொல்ல முடியாது…
பணக்காரர் என்றும் சொல்ல முடியாது…
ஆனா அவருக்கு ஒரு பெரிய பலவீனம் இருந்தது…
செருப்புகள்.
விதவிதமான செருப்புகள்…
விதவிதமான ஷூக்கள்…
அதை வாங்கி வீட்டில் அடுக்கி வைப்பார்.
ஒரு புதிய செருப்பு போட்டுக் கொண்டு
ஊருக்குள் நடந்தால் கூட
அவருக்கு ஒரு ராஜநடை வரும்.
“எங்க வாங்கினீங்க?” என்று யாராவது கேட்டால்
அவருக்கு அது பெரிய சந்தோஷம்.
அப்படி இருந்த மனிதன்
ஒருநாள் வெறுங்காலில் நடந்து வந்தார்.
“என்னங்க… செருப்பு போடலையா?” என்று கேட்டேன்.
அவர் காலைப் பார்த்தபடி,
“கால்ல சின்ன கொப்பளம் வந்துருச்சு…
செருப்பு போட முடியல…
ஆணி குத்துற மாதிரி வலிக்குது…” என்றார்.
பார்த்தேன்.
பெருவிரல் பக்கத்தில்
சிறிய புண் மாதிரி இருந்தது.
“நாலு நாள் போனா சரி ஆயிடும்…” என்றேன்.
அவரும் அப்படித்தான் நினைத்தார்.
2. தானாக குணமாகும் என்ற நம்பிக்கை
வீட்டுக்கு போனதும்
அவரது மனைவி வேப்பிலை அரைத்து பூசினார்.
அடுத்த நாள் மஞ்சள் வைத்தார்.
“இது காய்ந்து போயிரும்…” என்று இருவரும் நம்பினார்கள்.
ஆனால்…
இரண்டு நாளுக்கு பிறகு
அந்த கொப்பளம் உடைந்து சீல் வடிந்தது.
தர்மர் வெறுங்காலில் நடந்தார்.
மண் படிந்தது.
தொற்று அதிகமானது.
ஐந்து நாளுக்கு பிறகு
மீண்டும் சீல் பிடித்தது.
“என்னடா இது…” என்று அவர் பதற ஆரம்பித்தார்.
பத்து நாளுக்கு பிறகு
நடக்கவே முடியவில்லை.
“பேசாம ஆஸ்பத்திரி போயிரலாம்…” என்றார்.
3. மருத்துவத்தை நம்பிய நாட்கள்
இருபது நாட்களுக்கு பிறகு
அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
டாக்டர் பார்த்துவிட்டு
ஒரு களிம்பு கொடுத்தார்.
“ஐந்து நாள் போட்டா சரி ஆயிடும்…” என்றார்.
தர்மருக்கும் நம்பிக்கை வந்தது.
ஆனால்…
ஐந்து நாள் பத்து நாளானாலும்
புண் சரியாகவில்லை.
செருப்பு போட முடியவில்லை.
ஒவ்வொரு அடியும்
ஆணி குத்துவது போல வலி.
பிறகு தனியார் மருத்துவமனை.
ரத்த டெஸ்ட்…
சர்க்கரை டெஸ்ட்…
யூரின் டெஸ்ட்…
18,000 ரூபாய் செலவு.
“சின்ன விஷயம்னு அசால்டா இருக்காதீங்க…” என்று டாக்டர் கண்டித்தார்.
ஊசி போட்டார்கள்.
மாத்திரை கொடுத்தார்கள்.
சில நாள் வலி குறைந்தது.
அவர்களுக்குள் நம்பிக்கை பெரிதானது.
“இவ்வளவு செலவு பண்ணிருக்கோம்…
இப்போ நல்லாயிரும்…”
ஆனால்…
இருபது நாளுக்கு பிறகு
புண் இன்னும் பெரிதானது.
கால் வீங்க ஆரம்பித்தது.
இப்போது
அவர்களுக்கு மருத்துவத்தின் மீதும் பயம் வந்தது.
4. மந்திரத்தை நம்பிய இரவு தங்கதமிழன்கவிதைகள் படித்து மகிழுங்கள்
ஒருநாள்
ஒரு சொந்தக்காரர் வீட்டுக்கு வந்தார்.
தர்மரின் காலைப் பார்த்ததும்
முகம் மாறிவிட்டது.
“எப்பா…
இது சாதாரண புண் இல்லப்பா…” என்றார்.
தர்மர் பயந்தார்.
“யாரோ செஞ்சதை நீ தாண்டிட்ட…
தாண்டு குணம் இது…”
அவரது மனைவியின் முகம் வெளுத்தது.
“மருத்துவமனைக்கு போனா நல்லா ஆகாது…
சூனியக்காரரிடம் தான் போகணும்…” என்றார்.
அந்த ஒரு வார்த்தை போதும்.
வலியில் இருக்கும் மனிதனுக்கு
பயம் வந்துவிட்டால்
அவன் எதையும் நம்ப ஆரம்பித்துவிடுவான்.
அடுத்த நாள்
சூனியக்காரரிடம் சென்றார்கள்.
அவர் காலைப் பார்த்ததும்,
“யாரோ கழிச்சது தாண்டிட்ட…” என்றார்.
எலுமிச்சை…
புளிசாறு…
காணிக்கை…
ஐயாயிரத்து ஒன்று ரூபாய்.
“நாலு நாள் இதை பண்ணுங்க…
நல்லா ஆயிடும்…” என்றார்.
இரண்டு நாள் வலி குறைந்தது.
மீண்டும் அதிகரித்தது.
5. சூனியத்தை நம்பிய மனிதன்
மீண்டும் சூனியக்காரரிடம் சென்றார்கள்.
இந்த முறை அவர் கண்களை மூடி
மந்திரம் சொன்னார்.
பிறகு மெதுவாக,
“கருப்பு ஆடு வேணும்…
கோழி வேணும்…
701 காணிக்கை வேணும்…” என்றார்.
“இல்லன்னா காலை எடுக்கிற அளவுக்கு போயிரும்…” என்றார்.
தர்மரின் உயிரே நடுங்கிவிட்டது.
அவர்கள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள்.
கருப்பு ஆட்டின் ரத்தம்
நாலு முச்சந்தியிலும் தெளிக்கப்பட்டது.
பத்து நாள் அமைதி.
பதினொன்றாவது நாள்
மீண்டும் அதே வலி.
இப்போது
தர்மருக்கு எதை நம்புவது என்று தெரியவில்லை.
அப்போதுதான்
ஊரிலிருந்த இன்னொருவர் சொன்னார்:
“உன் பக்கத்து வீட்டுக்காரன் தான் சூனியம் வைத்திருக்கான்…”
அந்த ஒரு சந்தேகம் போதும்.
இப்போது
பக்கத்து வீட்டுக்காரனின் பார்வையிலும்
அவருக்கு விஷம் தெரிந்தது.
மற்றொரு சூனியக்காரர் வந்தார்.
வீட்டுக்குள் இருந்து எலும்பு எடுத்தார்.
ஜட்டிக்குள் இருந்து எலும்பு எடுத்தார்.
அவர்களுக்கே அதிர்ச்சி.
“இவ்வளவு நாளா நமக்கே தெரியாம சூனியம் இருந்துச்சா?”
20,000 ரூபாய்.
“சூனியம் எடுத்தாச்சு…” என்றார்.
அந்த இரவு
தர்மர் நிம்மதியாக தூங்கினார்.
இருபது நாள்
வலி கூட குறைந்தது.
ஏன் தெரியுமா?
மருந்தால் அல்ல…
மனநிம்மதியால்.
6. கடைசியாக கோவிலை நம்பியவர்கள்
மீண்டும் வலி வந்தது.
இப்போது
யாரோ சொன்னார்கள்:
“நீ பாவம் பண்ணிருக்க…
கோவிலுக்கு போ…”
அவர்களும் போனார்கள்.
மூன்று அமாவாசை.
காணிக்கை.
பூஜை.
பொருட்கள்.
எல்லாம் செய்தார்கள்.
ஆனால்…
புண் மட்டும் சரியாகவில்லை.
7. மீண்டும் தன்னையே நம்பிய மனிதன்
ஒரு சிறிய கொப்பளம்…
மூன்று லட்ச ரூபாயை சாப்பிட்டுவிட்டது.
சேமிப்பு போயிற்று.
நிம்மதி போயிற்று.
அறிவு கூட குழம்பிப் போயிற்று.
ஒருநாள்
தர்மர் சோர்ந்து போய் சொன்னார்:
“செத்தா மயிரு போச்சு…”
அன்று
மீண்டும் செருப்பு போட்டார்.
மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.
ஒரு மாதத்திற்கு பிறகு
அந்த புண் மெதுவாக குணமாகிவிட்டது.
இன்று
அவர் மீண்டும் விதவிதமான செருப்புகளை போட்டுக் கொண்டு நடக்கிறார்.
கருத்து
இந்தக் கதையில்
புண் பெரியது இல்லை…
பயம் தான் பெரியது.
வலியில் இருக்கும் மனிதன்
முதலில் மருந்தை தேடுவான்…
பிறகு அதிசயத்தை தேடுவான்…
அதற்குப் பிறகு
யாராவது சொல்வதை எல்லாம் நம்ப ஆரம்பித்துவிடுவான்.
மருத்துவம் தாமதமானால்
மூடநம்பிக்கை வேகமாக வளர்கிறது.
பயம் வந்த மனிதனுக்கு
சூனியம் கூட உண்மையாக தோன்றும்.
ஆனால் உண்மையில்…
அவரை கொன்றது புண் அல்ல…
பயம்.
— தங்கத்தமிழன்

0 Comments