கருத்து சுதந்திரமா? கழுத்தை நெரிக்கும் கமெண்ட் கலாச்சாரமா?
கருத்து என்பது மனிதனை உருவாக்கும் சக்தி
![]() |
| கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் |
கருத்து என்பது மனிதர்களை சிந்திக்க வைக்கும் ஒரு சக்தி. பல அறிஞர்களின் வலி, அனுபவம், போராட்டம் ஆகியவற்றிலிருந்து பிறந்த கருத்துக்கள்தான் இன்று மனித வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. பல முன்னோர்கள் கூறிய சிந்தனைகள், நூல்கள், வாழ்க்கை வழிகள் இன்னும் மனிதர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஒரு மனிதன் கஷ்டத்திலிருந்து மீண்டு வருவதற்கும், வாழ்வில் முன்னேறுவதற்கும் கருத்துக்கள் மிகப்பெரிய பாலமாக இருக்கின்றன. உலகப் பொதுமறை வள்ளுவர் எழுதிய திருக்குறள் முதல் பல அறிஞர்கள் எழுதிய நூல்கள் வரை மனித வாழ்க்கைக்கு ஒளி தரும் சிந்தனைகளாகவே இருந்து வருகின்றன.
முன்னோர்களின் சிந்தனைகள் மனித வாழ்வின் வழிகாட்டிகள்
நாம் பள்ளிகளில் பல அறிஞர்களின் கருத்துக்களை படித்து தேர்ச்சி பெற்று வாழ்ந்து வருகிறோம். பாரதியார், வள்ளுவர் போன்ற முன்னோர்களின் சிந்தனைகளை பெருமையுடன் பேசுகிறோம். அவர்கள் கூறிய கருத்துக்கள் மனிதனை அறிவுடன் வாழ கற்றுக் கொடுத்தவை.
அதேபோல் மதங்களும் மனிதனை நல்ல வழியில் நடத்த வேண்டும் என்பதற்காகவே பல கருத்துக்களை கூறுகின்றன. இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என எல்லா மதங்களிலும் மனித நேயம், ஒழுக்கம், அன்பு ஆகியவற்றை வலியுறுத்தும் கருத்துக்கள் இருக்கின்றன.
சமூக வலைதளங்களில் மாறிப்போன கருத்து சுதந்திரம்
ஆனால் இன்று சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் வேறொரு வடிவமாக மாறி வருகிறது. செல்போன் மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ள இந்த காலத்தில், பலர் கருத்து சொல்லும் உரிமையை தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
ஒரு குழந்தை பாடும் பாடலுக்குக் கூட தவறான கருத்துக்கள். ஒரு இளம் பெண் வீடியோ வெளியிட்டால் கீழ்த்தரமான வார்த்தைகள். பிரபலமானவர்களின் குடும்பத்தையும் பெண்களையும் இழிவாக பேசும் கமெண்ட்கள். ஒருவரை ஒருவர் அவமதித்து பேசுவது இன்று சாதாரண விஷயமாக மாறி வருகிறது.
வார்த்தைகளால் காயப்படுத்தும் மனிதர்கள்
அந்த கமெண்ட் பாக்ஸில் வரும் வார்த்தைகளை ஒரு பெண் படித்தால் அவள் மனநிலை எப்படி இருக்கும் என்று கூட பலர் சிந்திப்பதில்லை. மனிதர்களின் மனதை காயப்படுத்துவது சிலருக்கு ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது.
கருத்து சுதந்திரம் என்பது தவறை சுட்டிக்காட்டும் உரிமை. ஆனால் கெட்ட வார்த்தைகளால் இகழ்வது கருத்து அல்ல. மனிதர்களை மனதளவில் உடைக்கும் அளவிற்கு பேசுவது சுதந்திரம் அல்ல.
மனிதம் இல்லாத கருத்துக்கள்
இவர்கள் தான் கடவுளை வணங்குபவர்கள். இவர்கள் தான் நல்ல சமுதாயம் பற்றி பேசுபவர்கள். ஆனால் சமூக வலைதளங்களில் அவர்கள் எழுதும் வார்த்தைகள் மனிதத்தை வெட்கப்பட வைக்கும் அளவிற்கு இருக்கின்றன.
இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் மனிதர்களுக்குள் மிகப்பெரிய வெறுப்பும் வன்மமும் உருவாகும். வார்த்தைகள் கூட ஒருநாள் மனிதனை மனிதனுக்கு எதிரியாக மாற்றிவிடும்.
குழாயடி சண்டையிலிருந்து கமெண்ட் பாக்ஸ் வரை
சுமார் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு ஊர்களில் குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் பெண்களுக்குள் சண்டை வந்தால், கோபத்தில் எல்லோரையும் தப்பாக பேசுவார்கள். அந்த கோப வார்த்தைகளில் ஒரு வன்மம் இருக்கும். இன்று அதே நிலை சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.
ஒருவரை ஒருவர் அவமதித்து பேசும் இந்த கலாச்சாரம் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. நாம் உண்மையிலேயே மனிதர்களா என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. இல்லையெனில் காலம் மனித குலத்தை மிகவும் கொடுமையான பாதைக்கு இழுத்துச் செல்லும்.
— தங்கதமிழன்

0 Comments